அற்புதமாக ஜீவன் தந்தார்
எனக்கு வயது பன்னிரண்டாகும்போது, ஒரு Major Operation நடந்த சமயம். Operation Theatreஇல் இருந்து வெளிவந்து பல மணி நேரங்கள் ஆகியும் சுய நினைவு (Consciousness) திரும்ப வரவில்லை. டாக்டர்கள் குறிப்பிட்டிருந்த நேரமும் தாண்டிவிட்டது. அவர்கள் கைவிட்ட இந்நிலையில், என் படுக்கையின் அருகில் நின்று கொண்டிருந்த என்தாய் கண்ணீரோடு கதறி அழுது, “ஆண்டவரே இவளுக்கு உயிரைத் தாரும்” என விடாப்பிடியாய் ஜெபம் பண்ணின போது, கர்த்தர் உடனே மனமுருகி, அதிசயமாக போன உயிரை திரும்பக் கொடுத்தார். இவ்விதம் கர்த்தர் என்னை தமது அநாதி தீர்மானத்தின்படி ‘தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே நான்உன்னை அறிந்தேன்’ என்ற வாக்கின்படி, முன்குறித்துவிட்ட படியால், எனக்கு அற்புதமாக ஜீவன், சுகம் கொடுத்தார். இந்த அற்புதமானவரை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இன்று உயிரோடிருப்பதற்கு காரணம் இயேசு கிறிஸ்து தான். உங்களுக்கும் அற்புதம் செய்வதற்காகவே இயேசுகிறிஸ்து உங்களைத் தேடி வந்திருக்கிறார். கவலைப்படாதிருங்கள், இயேசுகிறிஸ்து உங்களை மிகவும் நேசிக்கிறார்: உங்களை நன்கு அறிந்திருக்கிறார். அவருடைய அன்பையும், வல்லமையையும் விசுவாசியுங்கள்: அவரை நோக்கிப் பாருங்கள்; அவரிடம் உங்கள் வியாதி மாறும்படி கேளுங்கள். நிச்சயம் இயேசுவிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள்.
நேரடியாக தரிசனமானார்
என்னுடைய சிறுவயதிலேயே கெட்ட கதைப்புத்தகம் படிப்பது, சினிமா பார்ப்பது, சிற்றின்பங்கள், உலக ஆசாபாசங்கள், விக்கிரகாராதனை போன்றவற்றின் மீது ஒரு பெரிய சலிப்பு உண்டானது. மேலும் என்னுடைய வாலிப நாட்களில், “என்னைப் படைத்த, என் மேல் அன்பு செலுத்தும் ஒரு உண்மையான கடவுள் உண்டா?” என்று ஒரு எண்ணம் எழுந்தது. எப்படியாகிலும் தெய்வத்தைப் பார்க்க வேண்டும். தெய்வத்தோடு பேச வேண்டும் என்ற வாஞ்சையும் ஏற்பட்டது.

நான் கல்லூரியில் IInd Year படித்துக் கொண்டிருந்த சமயம். ஒருநாள் இரவில் என் அறைக்கதவைத்தட்டி, என் பெயரைச் சொல்லி கூப்பிடும் சத்தம் கேட்டு விழித்திருந்தேன். அப்பொழுது நான் தங்கியிருந்த அறை முழுவதும் பளிச்சிடும் தாங்கக் கூடாத ஒரு பேரொளி நிறைந்திருந்தது. என் அறைக்குள் யாரோ ஒருவர் பிரசன்னமாயிருந்ததை (வந்திருந்ததை) நான் பார்க்க முடிந்தது. ஆனால் என் Room Mates இருவரும் இதை அறிய முடியாமல் தூங்கிக் கொண்டிருந்தனர்.
என்னோடு பேசினார்
நான்தான் உன்னைப் படைத்த உண்மையாகவே உன்னை நேசிக்கும் கடவுள் இயேசுகிறிஸ்து, உன்னைத் தேடி நான் வந்திருக்கிறேன். உனக்காகவே நான் இரத்தஞ்சிந்தி மரித்தேன், எனக்கூறி சிலுவை காட்சிகளை காண்பித்தார். நான் உயிரோடு எழுந்து விட்டேன். உன்னோடு கூட இருப்பேன் என்றும் சொன்னார். உடனே அன்பு பொங்க, தேம்பித் தேம்பி விடாமல் அழுது கொண்டேயிருந்தேன். என் பாவபாரம், மற்ற கவலைகள் எல்லாம் அவரிடம் ஒவ்வொன்றாய் சொன்னேன். உடனே அதுவரை என்னை அழுத்திக் கொண்டிருந்த தாங்கக் கூடாத பாரச்சுமை என்னை விட்டு அகன்றது. அந்தநேரம் முதல் மிகவும் விடுதலையோடு, ஆறுதலோடு, சந்தோஷமாக காணப்பட்டேன். முதல்முறையாக வேதத்தை திறந்து முழங்காலில் நின்று படிக்க ஆரம்பித்தேன். எனக்குத் தேவையான, வசனங்களின் இருப்பிடங்களை அவரே என்னிடம் நேரிடையாகச் சொல்லி, வாசிக்கவும், தியானிக்கவும் உதவி செய்தார். அதுவரை தூக்கமில்லாமல் கஷ்டப்பட்ட எனக்கு “கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு சுகமான நித்தரை அளிக்கிறார்” என்ற வசனத்தின்படி நான் கேட்ட மாத்திரத்தில் தானே, என்னை அவருக்குப் பிரியமானவளாக மாற்றி, நல்ல நித்திரை தந்து சமாதானத்துடன் சுகமாய் தங்கப் பண்ணினார். என்னோடு பேசுகிற இயேசுகிறிஸ்து இன்றே உங்களோடும் பேசி ஆறுதலளிப்பாராக!
சந்தோஷம் சமாதானம் தந்தார்
அதே ஆண்டு 1975, ஆகஸ்டு 15-ஆம் தேதி Collegiate Ambassadors Meeting ஒன்றில் பங்குபெற ஒரு வாய்ப்பு கிட்டியது. அங்கு “தன்பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்ற பிரசங்கம் மூலம் அதிகமாக தொடப்பட்டேன். நான் சிறுவயது முதல் அறிந்தும், அறியாமலும் செய்த ஒவ்வொரு தவறுதல்களையும் ஆண்டவர் எனக்கு ஒரு Film ஓடுவது போல் காண்பித்தார். பொய் பேசியது. கீழ்ப்படியாதது போன்றவற்றை உணர்த்தினார். அதுவரை இதையெல்லாம் ஒருபாவமாகவே கருதவில்லை. ஆனால் ஆண்டவர் உணர்த்தினபோதோ, கண்ணீரோடு கதறி அழுதேன். என் பாவங்களை எனக்கு மன்னியும். பரிசுத்தமுள்ள இருதயத்தை எனக்குத் தாரும், என்னை ஏற்றுக்கொள்ளும், மெய்யான சந்தோஷத்தைத் தாரும், என்று அவரை நோக்கிக் கேட்டேன். உடனே அந்த நேரத்தில் நான் உன் பாவத்தை மன்னித்தேன் என திட்டமாக என்னோடு பேசினார். அந்த நேரம் என் குற்றச்சாட்டு மாறி அளவற்ற தெய்வீக சந்தோஷம், சமாதானம் என்ளை அதிகமாக நிரப்பியதை உணர்ந்தேன்.
அன்று முதல் என் பாவங்களை மன்னீத்தீரே, மெய்சமாதானம் தந்நீரே, உமக்கு நன்றி ஸ்தோத்திரம் என்று அவரைத் துதிக்கிறேன். 1975இல் இயேசுகிறிஸ்து எனக்குள் கொடுத்த அந்த சமாதானம் இன்றுவரை எனக்குள் இருக்கிறதை நான் முழு நிச்சயமாக கூற முடியும். என் வாழ்க்கையில் போராட்டங்கள், பிரச்சனைகள், தேவைகள், நெருக்கங்கள் வந்தபோதிலும், அன்று இயேசு கிறிஸ்து எனக்குள் கொடுத்த அந்த மெய்சமாதானம் மாறாமல் நிலைகொண்டிருக்கிறது. காரணம் இது தான் பாவ மன்னிப்பின் சந்தோஷதமாகிய தெய்வீக சமாதானம்.
உலக காரியங்கள், சினிமா, நாடகம், குடி, போதை, வெற்றிலை, கெட்ட கதை புத்தகம் படித்தல், ஆபாச படங்கள் போன்ற தீய பழக்கங்கள் உங்களை அடிமைப்படுத்தி, அந்த நேரத்திற்கு சின்ன இன்பமாய் தெரியும். இது நிலையானதல்ல. ஆனால் இயேசுகிறிஸ்து கொடுக்கிற சமாதானம் உலகம் கொடுக்கிற பிரகாரமாக அல்ல என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்றார். இந்த சமாதானம் நம்மைவிட்டு எடுபடாத நித்திய சமாதானமாகும். இந்த சமாதானத்தை எதுவும் கெடுக்கவே முடியாது. இப்படிப்பட்ட அழியாத சந்தோஷம் சமாதானத்தை எனக்குக் கொடுத்த இயேசு உங்களுக்கும் கொடுக்க விரும்புகிறார். இன்றே இயேசு கிறிஸ்து உங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தின அந்த இரத்தத்தின் மேன்மையை விசுவாசித்து என் பாவங்களை மன்னியும், என் இருதயத்தை உம்முடைய இரத்தத்தினால் கழுவி சுத்திகரியும். என் உள்ளத்தில் வாரும். எனக்கு சமாதானத்தைத் தாரும் என்று ஜெபியுங்கள், இப்பொழுதே உங்கள் பாவங்களை நீக்கி மன்னித்து, தமது இரத்தத்தினால் கழுவி பரிசுத்தமாக்கி சமாதானம் தருவார்.
வல்லமை தந்தார்
16.5.77 அன்று நான் உம்மை இப்பொழுது கண்டுகொண்டு, சற்று அறிந்த எனக்கும், உம்மை அறியாத என் வீட்டாருக்கும், இனஜனபந்துக்களுக்கும் மத்தியில் நான் ஒரு சாட்சியாக வாழ வேண்டும். எனக்கும், மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் ஜெபம் பண்ணினேன். அவ்வளவுதான் கர்த்தருடைய மாபெரும் வல்லமை என்மேல் கிருபையின் நதியாக ஊற்றப்பட்டது. என்னால் தாங்க முடியாத ஒரு வல்லமை என்னை நிறைத்தது. அன்று வரை வாய் திறந்து சுத்தமாக நன்றாக ஜெபிக்க தெரியாதிருந்த நான், சத்தம் போட்டு தெளிவாக பேசினேன். முழங்காலில் நின்ற நிலையிலேயே சிலமணி நேரங்கள் துள்ளி குதித்தேன். அபிரிமிதமான கிருபையும், வல்லமையும் என்னை மூன்று நாட்கள் தொடர்ந்து நிரப்பிக் கொண்டேயிருந்தது.
கர்த்தர் கிருபை கொடுத்திருந்தபடியால் அதுவரை பேசியிராத பற்பல பாஷைகளில் என் நாவு பேசியது. மாற்கு 16:17 இன்படி விசுவாசிக்கிறவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாளமாகிய நவமான பாஷை பேசும் வரத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை செய்தார். அந்த நாட்கள் எனக்கு மிகவும் பேரானந்தம் நிறைந்த நாட்களாய் இருந்தன. எல்லையற்ற சந்தோஷம். அடக்கிக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து நான் ஒவ்வொருநாளும் பலமணி நேரங்கள் ஆவியில் நிரம்பி ஜெபிக்கவும், தரிசனங்களைக் காணவும் கர்த்தர் உதவி செய்தார். பலகாரியங்களை வெளிப்படுத்தி என் விசுவாசம் வளர உதவிசெய்தார். எங்கள் சொந்தக்காரர் பலர், யாரும் ஆண்டவரை அறியாத நிலையில் இருந்தபோதிலும், அவர்களும் இந்த சாட்சி மூலமாக இரட்சிப்பு பெறவும், உடனே அபிஷேகமும் பெற கர்த்தர் உதவி செய்தார். இன்றும் கர்த்தர் அதே போல மற்றவர்களுக்கு சாட்சி சொல்ல வைக்கிறார். இரட்சிப்புக்குள் அபிஷேகத்திற்குள் வழிநடத்தவும் உதவி செய்கிறார். நீங்களும் சாட்சியாக வாழ வல்லமை கேளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளும் வந்து, வல்லமை தந்து, ஜெயம் கொண்டவர்களாய் வாழவைத்து, மற்றவர்களுக்குள் உங்களை ஆசீர்வாதமாக பயன்படுத்துவார்.
கீழ்ப்படிய உதவி செய்தார்
அதுவரையிலும், ஞானஸ்நானத்தைக் குறித்து கேள்விப்படாதிருந்தேன். எனக்கு ரோ 6:4-11; கொலோ 2:12; தீத்து 3:5 போன்ற வசனங்களின் இருப்பிடங்களைக் கூறி, எடுத்து வாசிக்கவும், அதன்படி கீழ்ப்படியவும் ஏவினார். நீ இதை நிறைவேற்றும் போது உன்னை இன்னும் புதிய ஆசீர்வாதமான பாதையில் நடத்துவேன் என்றார். உடனே 1.1.78 அன்று ஞானஸ்நானம் எடுக்க உதவி செய்தார். அப்பொழுது “நீ எனக்கு மிகவும் பிரியமானவள்’ என்ற ஒரு குரலைக் கேட்டு மிகவும் பரவசப்பட்டேன். அதே ஆண்டு ஊழியத்திற்கென்று கர்த்தர் என்னை பெயர் சொல்லி அழைத்தார். முற்றிலும் ஒப்புக்கொடுத்தேன். அன்று முதல் தினம் ஒரு ஆத்துமாவை கர்த்தரே அனுப்பி வைக்கிறார். அவர்கள் இரட்சிப்பு பெற்று அபிஷேகம் பெற்றுச் செல்வது மிகவும் சந்தோஷமாயிருக்கிறது.
ஆசீர்வாதமாய் மாற்றினார்
ஒரு முறை நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது அக்கினிமயமான கண்கள் உடையவராக, நீட்டிய கரங்களுடன் என்னை ஆசீர்வதித்து, என்னோடு ‘உள்னை நாள் ஊழிய பாதையில் நடத்துவேன். ஆதலால் நீ family life-க்காக ஜெபி என்றும், உன்னை இன்னும் அநேகருக்கு ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் வைப்பேன் என்றும் பேசினார். இன்றும் அப்படியே கர்த்தர் கிரியை செய்து வருகிறார். உங்களையும் ஆசீர்வாதமாக மாற்றுவார். எல்லா காரியங்களுக்காகவும் கர்த்தரையே நோக்கிப் பார்த்து கேளுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு அதன்படி நடவுங்கள், அப்பொழுதுதான் உங்களுக்கும் அற்புதம் செய்வார், ஆமென். இன்னும் அதிகம் அறிய விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.